Monday, May 23, 2005

மறக்கப்பட்ட போராட்டமும், மறைந்துபோன உயிர்களும் - 1

சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்பவர்கள், கும்பகோணம் சாலையில் செல்பவர்கள் சாலை ஓரங்களில் கறுப்பு கிராணைட் கற்களால் கட்டப்பட்ட சில தூண்களை பார்த்திருக்க கூடும். கறுப்பு நிறத்தில் இருக்கும் அந்த தூண் எதை குறிக்கிறது என்று சிலர் யோசித்திருக்கலாம். பலர் ஏதோ ஒன்று என்று நினைத்து கொண்டு சென்று இருக்கலாம். அந்த தூண் மீது ஒரு அக்னி கலசம் இருக்கும். ஒரு காலத்தில் உரிமை குரல் கொடுத்து எரிந்த கலசங்கள் அவை. இன்று வெறும் சின்னங்களாய் அன்றைய போராட்டத்தின் சாட்சியாய் நின்று கொண்டிருக்கின்றன.

அந்த தூண்கள் வன்னியர்களின் தியாகச் சின்னங்கள்.

வட மாவட்டங்களில் 9 இடங்களில் இந்த தூண்களை பார்க்கலாம். ஏன் இந்த தூண்கள் நிறுவப்பட்டன தெரியுமா ? அந்த இடத்தில் தான் 9 உயிர்கள் மாண்டன. தியாகிகளின் உயிர் பிரிந்த அதே இடத்தில் தூண்களை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் வன்னிய சமுதாயம் அந்த தியாகிகளின் தியாகத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் லட்சிய உணர்வுடன் இருந்த வன்னிய உணர்வு இன்று எங்கேனும் இருக்கிறதா என்றும் தேடிக்கொண்டிருக்கிறது.

இவர்கள் ஏன் தியாகிகள் ஆனார்கள் ? காந்தி பிறந்த அகிம்சை மண்ணில் அதே மண்ணின் காவல்துறையாலேயே மண்ணின் மைந்தர்களான இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தன்னுடைய குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியவர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர்.

பெரியார் வழி வந்ததாக கூறிக்கொள்ளும் திராவிடக்கட்சிகளின் ஒரு கட்சி அன்றைக்கு ஆளுங்கட்சி. முதல்வர் அமெரிக்க மருத்துவமனையில் இருக்க அவரது அடிவருடிகள் ஆட்சி செலுத்தி காவல்துறையினை எம் மக்களின் மேல் ஏவினர். தமிழினத்தலைவராக தன்னை கூறிக்கொள்ளும் மற்றொரு திராவிட தலைவர் தமிழனின் ஒரு பிரிவு மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துள்ள அடக்குமுறையை கண்டுகொள்ளாமல் சென்னை அண்ணாசாலையில் அண்ணா அறிவாலய திறப்பு விழா நடத்திக் கொண்டிருந்தார்.

தமிழகத்தில் நடந்த பல போராட்டங்களில் எல்லோராலும் கொச்சைப்படுத்தப்பட்ட ஒரு போராட்டம். ஆனால் வன்னியர்களின் தியாகத்தின் எழுச்சியாக நடந்த போராட்டம். 9 உயிர்களை பறிகொடுத்து, பலவிதமான அடக்குமுறைகளுக்கும் இன்னல்களுக்கும் இடையே வெற்றிகரமாக நடந்த போராட்டம். வன்னிய சக்தியை உலகுக்கு அடையாளம் காட்டிய போராட்டம் - அது தான் 1987ல் நடந்த 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம்.

நான் அப்பொழுது பள்ளியில் 11வது படித்து கொண்டிருந்தேன். போராட்டத்திற்கு முதல் நாள் எங்கள் கிராமத்திற்கு காவல்துறையினர் வந்து முன்னேச்சரிக்கை நடவடிக்கை என்று சிலரை கைது செய்தனர். என்னுடைய அப்பா எங்கள் கிராமத்தின் வன்னியர் சங்க கிளை தலைவர். காவல்துரையினர் அவரை கைது செய்ய வருவார்கள் என்பது முன்கூட்டியே தெரியும் என்பதால் ஜெயங்கொண்டத்தில் இருந்த என் மாமா வீட்டிற்கு சென்று விட்டார். மாலையில் எங்கள் வீட்டிற்கு வந்த போலிசார் என் அப்பாவை பற்றி விசாரித்தனர். அவர் வெளியூர் போயிருக்கிறார் என்று சென்னோம். சென்று விட்டார்கள். முதல் நாள் போலிசார் சிலரை கைது செய்தாலும் ஓரளவு கண்ணியமாகவே நடந்து கொண்டனர். ஒரு போராட்டம் அதன் பொருட்டு சிலரை கைது செய்வது என்பது போலத் தான் அவர்களின் நடவடிக்கை இருந்தது. வன்னியர் சங்கம் பற்றி யாரும் அப்பொழுது பெரிதாக அறிந்திருக்கவில்லை.

முதல் நாளே போராட்டத்தின் தீவிரம் தெரியத்தொடங்கியது. பல இடங்களில் மறியல். சென்னை மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் வழித்தடங்களில் அரசு பேருந்துகள் எதுவும் செல்லவில்லை. தனியார் பேருந்துகள் விலக்கி கொள்ளப்பட்டன. என்னுடைய அப்பா ஜெயங்கொண்டத்தில் கைது செய்யப்பட்டு விட்டார். வீட்டில் மதியம் 2:10மணிக்கு திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் இருந்து ஒளிபரப்பாகும் மாநில செய்திகளை கேட்போம். தேசிய நெடுஞ்சாலைகள் ஸ்தம்பித்த செய்திகளை தெரிந்து கொள்வோம். முதல் நாளே சில இடங்களில் தடியடி மற்றும் போலிசாரின் துப்பாக்கி சூடு நடந்தது. முதல் நாள் போராட்டத்தில் 4 பேர் போலிசாரின் தூப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்கள் என்று நினைக்கிறேன். 4 உயிர்களை கொடுத்து முதல் நாள் போராட்டம் வெற்றி பெற்றது.

எங்கள் கிராமத்தை சேர்ந்த முக்கியமானவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு விட்டார்கள். வீட்டில் என்னுடைய அம்மா, பாட்டி மற்றும் என் கிராமத்தினர் எல்லோரும் பீதியில் இருந்தனர்.

அதன் பிற்கு தான் போலிசாரின் அடக்குமுறை தொடங்கியது. போராட்டத்தை நசுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர் அல்லது அவர்களுக்கு அவ்வாறு நெருக்கடி - மேலிடத்தில் இருந்து உத்தரவு. அதே நேரத்தில் உயிர்கள் பலியாதனால் யாரும் போராட்டத்திற்கு வர மாட்டார்கள் என்றும் நினைத்தனர்.

மாறாக போராட்டம் தீவிரம் அடைந்தது. சில குழுக்கள் தலைமறைவாக பல கிராமங்களுக்கும் சென்று போராட்டத்தை தீவிரப்படுத்தினர். மறுநாளும் பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. சாலைகளில் பேருந்துகளை காவல்துறையினரின அணிவகுப்புடன் நடத்தினர். இதனை தடுத்தே தீர வேண்டும் என்று பல கிராமங்களில் முடிவெடுத்தனர். அதற்கு ஒரே வழி சாலையோரம் இருக்கும் மரங்களை வெட்டுவது. சாலைகளை சேதப்படுத்துவது.

எங்களுடன் இருந்ததெல்லாம் 20 வயதை ஒட்டியவர்கள் தான். நானும் அந்த அணியில் ஒட்டிக்கொண்டேன். நாங்கள் விதை விதைத்து வளர்த்த மரங்களை வீட்டிற்கு அழுகு பொருட்களை வேலைப்பாட்டுடன் செய்வதற்காக வெட்டாமல், எங்கள் தலையெழுத்தை மாற்றுவதற்காக வெட்டினோம். பல வருடங்கள் வளர்ந்த பலமான மரங்கள். பலர் சேர்ந்து வெட்டுவதெல்லாம் சாத்தியம் இல்லாத ஒன்று என்பது வெட்ட ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது. என்ன செய்வது என்று யோசித்து சாலையோரங்களில் இருக்கும் பெரிய புளியமரங்களின் பொந்துகளில் மண்ணெண்ய் உற்றி நெருப்பு வைத்து கயிறு கட்டி சாலையில் சாய்த்தோம். பல வருடங்களாக அசையாமல் நின்று கொண்டிருந்த மரம் எங்கள் வாழ்கையின் தலையெழுத்தை மாற்றுவதற்காக மண்ணில் வீழ்ந்தது.

இரண்டாவது நாளும் போராட்டம் தீவிரமாகியது. போலிசார் இதனை எதிர்பாக்கவில்லை. எங்களை கலகக்காரர்கள் என்று அறிவித்து கண்டதும் சட உத்தரவிட்டனர். கிராமங்களுக்கு போலிசார் சென்று வீட்டில் இருப்பவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்த சம்பவங்களை வேள்விபட்ட என்னுடைய அம்மா என்னையும், என் தங்கைகளையும் ஜெயங்கொண்டத்தில் இருந்த என் மாமா வீட்டிற்கு அழைத்து கொண்டு சென்று விட்டார். பல கிராமங்கள் போலிசாரால் சூறையாடப்பட்டன.

இரண்டாவது நாள் கண்டதும் சுட உத்தரவிட்ட அரசின் நடவடிக்கையால் மேலும் சில உயிர்களை நாங்கள் பலிகொடுத்தோம்.

(போராட்டத்தில் பலியான வன்னிய தியாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் என்ன செய்தார் என்று யாராவது கேட்ககூடும் ? இந்த போராட்டத்தின் முதல் வருட நினைவு வீரவணக்க கூட்டத்தில் தியாகிகளின் குடும்பங்கள் அனைத்தையும் டாக்டர் ஐயா தத்து எடுத்துக் கொண்டார்)

9 comments:

Anonymous said...

//தியாகிகளின் குடும்பங்கள் அனைத்தையும் டாக்டர் ஐயா தத்து எடுத்துக் கொண்டார்//

உங்க ஐயா ஐரோப்பா டூர் வந்தபோது அந்த தியாகிகளின் குடும்பவாரிசுகள் கூட வந்த மாதிரி தெரியவில்லையே. ஐயா குடும்பம் மட்டும் தான் ஏழு எட்டு பேர் வந்தாங்க. தத்து எடுத்துகறதுங்கரது பெரிய வார்த்தை பாஸ்.வேர ஏதாவது ஒரு வார்த்தையை சொல்லுங்க பாஸ்.

குழலி / Kuzhali said...
This comment has been removed by a blog administrator.
குழலி / Kuzhali said...

நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவிட வந்திருக்கும் வீரவன்னியனின் வரவு நல்வரவாகுக. மற்றவர்களால் மறக்கப்பட்ட போராட்டமல்ல அது, மறைக்கப்பட்ட போராட்டம், வெகுசன ஊடகங்களின் காழ்ப்புணர்ச்சியினால் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட போராட்டம் ஆனால் அது மற்றவர்களுக்கு வேண்டுமானல் மறைக்க,மறக்கடிக்கப்பட்டிருக்கலாம், வன்னியர்கள் என்றும் மறக்க கூடிய போராட்டமல்ல அது. முந்தைய எனது பின்னூட்டத்தை நானே தான் அழித்தேன். தொடருங்கள் உங்கள் பதிவுகளை

Anonymous said...

ஜாதி அரசியலை கையில் எடுத்துக்கொண்டு, ஆ, அது சுடுதே, என்று அலறினால்?

வீரவன்னியன் said...

காழ்ப்புணர்ச்சியை கக்குபவர்கள் கக்கிவிட்டு செல்லுங்கள்
எங்களுக்கு அவை தான் உரமிட்டு கொண்டே இருக்கிறது

காலங்காலமாய் வேற்கம்புகளை தூக்கியவர்கள் நாங்கள்
உழைத்து உரமேறிய மார்புகள் எங்களுடையது
உங்கள் சொல் அம்புகள் எங்களை என்ன செய்து விடும்

வீறுகொண்டு எழுச்சியுடன் நடை போடுவோம்

சங்கரய்யா said...

நாங்கள் விதை விதைத்து வளர்த்த மரங்களை வீட்டிற்கு அழுகு பொருட்களை வேலைப்பாட்டுடன் செய்வதற்காக வெட்டாமல், எங்கள் தலையெழுத்தை மாற்றுவதற்காக வெட்டினோம்.

இனி மரம் வெட்டி என்று யாரும் கூறினால் இதையே பதிலாக கூறலாம்

ஜெ. ராம்கி said...

ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி இருக்குது. எனக்கும் அந்த போராட்டத்தின் பத்திய ஞாபகங்கள் மிச்சமிருக்கு. எழுதினால் நிச்சயம் காழ்ப்புணர்ச்சின்னு சொல்வாங்க.. சோ, இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்!

Anonymous said...

veeravanniyan

I want to know about the struggle completely. What was the objective? can u please post a blog for the same.

Prakash

இந்திரசித்து said...

வீரவன்னியன்,
தங்களின் பதிவுகள் உண்ர்ச்சி மிக்கவையாக இருந்தன. ஆனால் எல்லா வன்னியர்களூம் குடிகாரர்கள் என்று பொதுமைப்படுத்தி குறிப்பிடுவது வரலாற்று பிழையாகும். நீங்கள் பார்த்த வாழ்ந்த சமுக சுற்றுசூழல் வேண்டுமெனில் அப்படி இருந்திருக்கலாம்(காடுவெட்டி அருகிலிருப்பதாலொ என்னவோ.. சும்மா வெளையாட்டுக்குதான்..)

சற்றே பழய தென்னாற்காடு மாவட்டத்தை பார்த்தீர்களானால் நிலமை வேறு. இங்கே வன்னியர்கள் 'மானமிகு' வாகவே வாழ்கிறார்கள். இங்கே யாரும் குடிப்பதில்லை என்று கூறவில்லை, குடிப்பதை கெளரவத்திற்கு இழுக்கான செயலாகவே கருதினர். எந்த படையாட்சியும் குடித்துவிட்டு திண்
ணையில் படுப்பவனில்லை, வீட்டு பெண்களை வேலைக்கு அனுப்பி பிழைப்பு நடத்துபவன் வன்னியனாக அங்கீகரிக்கபடமாட்டான். இங்கே பல பகுதிகளில் வயதுக்கு வந்த வன்னியப்பெண்கள் கல்யாணம் ஆகும் வரை வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள்.

உங்களின் பதிவுகளில் உணர்ச்சி வேகத்தில் வன்னியர்கள் எல்லாம் ராமதாசு வரும் வரை தற்குறிகளாக திரிந்தார்கள் என்ற பொருள் படும்படி பிதற்றியுள்ளீர்கள். இது முற்றிலும் தவறான் கருத்தாகும், இதை நிருபிக்க நான் பல எதிர் வாதங்களை வைக்கமுடியும் இந்த வலைதளம் அதற்கு தகுந்த ஊடகம் அல்ல.


அய்யா ராமதாசு பற்றி கூற வேண்டுமெனில், அவரை 2 காலங்களில் மதிப்பிடலாம்.
ப.மு.ரா(பதவிக்கு முந்தய ராமதாசு)
ப.பி.ரா(பதவிக்கு பிந்தய ராமதாசு)

ப.மு.ரா - ஒரு சமுதாய தலைவர், அந்த சமுதாயத்திற்காக தன்னையே அர்பணித்துக்கெண்டவர் என்பதில் எவரும் எதிர் கருத்து வைப்பர் என்பது அய்யமே. இந்த காலகட்டங்களில் அய்யா அவர்களுடன் பழகியுள்ளேன், வன்னியர் சங்க நாட்களில் அவருக்காக கொடி பிடித்து விளம்பர வாசகங்கள் ஒட்டியுள்ளேன், 3 உழவு உந்திகள் முலம் அய்யாவின் கூட்டத்திற்கு வர ஆவலுற்றவற்களை அழைத்து வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் அய்யா அவர்களின் பேச்சு மூச்செல்லாம் வன்னியர்களின் வாழ்வும் வளமும் மட்டுமே நிறைந்திருக்கும்.

ப.பி.ரா: 1987ல் நடைப்பெற்ற போராட்டத்தில் குண்டடிப்ப்ட்ட சிறை சென்ற எல்லொரும் எப்படி கெளரவிக்கப்பட்டார்கள் என்பது எல்லாரும் அறிந்ததுவே. பா.ம.கா வின் தென்னாற்காடு மாவட்ட வள்ர்ச்சிக்கு பு.தா. இளங்கோவன் பு.தா. அருள்மொழி(அப்போதே தமிழில் பெயர் கொண்டவர்கள்) சகோதரர்கள் ஆற்றிய பணிகள் மகத்தானது, சொந்த சொத்துக்களை விற்று கட்சிப்பணியற்றியவர்கள், அவர்களை விட தகுதியானவர்கள் யாரும் உள்ளனரா அமைச்சர் பதவிக்கு?? திரு அன்புமணியை விட எந்த விதத்தில் குறைவு? இதே ப.மு.ரா 1991 ல் காட்டுமன்னார்கோயில் சீரணி அரங்கில் பேசுகிறார் "நானோ என் குடும்பத்தினரோ சட்டமன்றத்திலோ,நாடாளூமன்றத்திலோ கால் வைக்க மாட்டோம், எந்த பதவியிலும் அமரமாட்டோம்.."

அந்த வயதில் எனக்கு நறம்புகள் முறுக்கேறும் இந்த பேச்சைக்கேட்டு.
இன்று(ம்) நினைத்து வெட்கப்பட்டு கொள்வேன்.

ராமதாசு பற்றிய உங்களின் கருத்துக்களை ப.மு.ரா வாக முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்.

இன்று அய்யா அவர்களைப்பற்றிய என்னுடைய கருத்து மாறியிருந்தாலும்
பெரும்பான்மை வன்னியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவர் டாக்டர் ராமதாசு அவர்கள் மட்டுமே என்பதில் அய்யமில்லை.