Sunday, December 02, 2007

எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் வேணுகோபால் டிஸ்மிஸ்: அன்புமணி அதிரடி

டெல்லி, அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக (எய்ம்ஸ்)இயக்குநர் பதவியிலிருந்து டாக்டர் வேணுகோபாலை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார் மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி.

எய்ம்ஸ் தொடர்பான சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதில் ஜனாதிபதி கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் இந்த டிஸ்மிஸ் உத்தரவைப் பிறப்பித்தார் அன்புமணி.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது அதை மறைமுகமாக ஆதரித்தவர் வேணுகோபால் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவருக்கு அன்புமணிக்கும் மோதல் மூண்டது.

இந் நிலையில், எய்ம்ஸ் மற்றும் பிற மருத்துவ உயர் கல்வி நிறுவனங்களுக்கான ஆய்வு சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்ததால் இது சட்டமானது.

இதையடுத்து முதல் வேலையாக டாக்டர் வேணுகோபாலின் பதவியைப் பறித்துள்ளார் டாக்டர் அன்புமணி. நேற்று மாலை டாக்டர் வேணுகோபாலின் பதவி பறிக்கப்பட்டது தொடர்பான கடிதத்தை அவருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார் அன்புமணி.

எய்ம்ஸின் தற்காலிக இயக்குநராக டாக்டர் தீரத் தாஸ் டோக்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சீனியாரிட்டி அடிப்படையில் டாக்டர் வேணுகோபாலுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். எய்ம்ஸ் டீனாக இருந்துள்ள டோக்ரா, இன்று பதவியேற்றுக் கொள்கிறார்.

கடந்த 2003ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி எய்ம்ஸ் இயக்குநராக நியமிக்கப்பட்டார் வேணுகோபால். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதன்படி அடுத்த ஆண்டு ஜூலை 3ம் தேதிதான் வேணுகோபாலின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

ஆனால் இதைத் தடுக்கும் வகையிலேயே தற்போது புதிதாக எய்ம்ஸ் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, தற்போது 65 வயதுக்கு மேல் இந்தப் பதவியில் நீடிக்க முடியாது. இதன்படி வேணுகோபாலின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த மனு மீதான விசாரணை முடியும் முன்பே அவரது பதவியைப் பறித்து விட்டார் அன்புமணி என்பது குறிப்பிடத்தக்கது.

வேணுகோபால் பதவி நீக்கம் தொடர்பான சுகாதாரத் துறை அமைச்சரின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக எய்ம்ஸ் நிர்வாகக் குழுக் கூட்டம் வருகிற 7ம் தேதி கூட்டப்பட்டுள்ளது.